Wednesday, June 20, 2012

நம்பிள்ளையின் சிறப்பு

தெள்ளியதா நம்பிள்ளை செப்புநெறி தன்னை
வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளை இந்த
நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்தது
ஈடு முப்பத்தி ஆறாயிரம்


நம்பிள்ளை செப்பிய பேருரைகளை வடக்குத் திருவீதிப்பிள்ளை ஏடுபடுத்திய வரலாற்றுச் சிறப்பை கூறுகிறது இந்த உபதேச ரத்தினமாலை பாசுரம்.

அதாவது, தெளிவாக நம்பிள்ளை அருளிச்செய்யும் மார்கத்தை, ஔதார்யமுடைய (genorosity) வடக்குத் திருவீதிப்பிள்ளை இந்த உலகத்தில்லுள்ளோர் அறிந்துக் கொள்ளும்படி திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை செவ்வையாக உரைத்தது ஈடு என்னும் முப்பத்து ஆறாயிரப்படி வ்யாக்யானமாகும் என்று உபதேச ரத்தினமாலையில் மாமுநிகள் காட்டுகிறார்.

இந்த பாசுரத்தில் மாமுநிகள் மேற்கோள் காட்டும் சில பதங்களை விளக்கமாக பார்ப்போம்.

மாறன் மறைப்பொருளை நன்குரைத்தது:
"ஆனை கோலம் செய்தாப்போலே மிகத் தெளிவாம்படி அருளிச் செய்தது" என்று பிள்ளைலோகம் ஜீயர் சாதித்து அருள்கிறார். இதனால் தெளிவும், அழகும் மிக்கது ஈடு வ்யாக்யானம் என்பது கருத்து

தெள்ளியதா நம்பிள்ளை செப்பியது: திருவாய்மொழிக்கு வ்யாக்யாநம் இட்டருளிய குணவாளர்களான திருக்குருகைப் பிரான் பிள்ளான் முதலானோர் வ்யாக்யானத்தை சுருங்க எழுதி விளக்க வேண்டியதை வாய்மொழியாகக் கூறி வந்தார்கள். ஆனால் ஈட்டில், சொல்ல வேண்டுவன அனைத்தையும் ஒன்று தப்பாமல் விரிவாகச் சொற்பெருக்காற்றியபோது கேட்டு எழுதப்பட்டதால் "தெளிவு" மிகுந்து காணப்படுகிறது. எனவேதான் ஈடு தெள்ளியதாக செப்பிய உரை என்று மாமுநிகள் சாதிக்கிறார்

சரி, மாமுநிகள் ஏன் வடக்குத் திருவீதிப் பிள்ளையை வள்ளல்’ என்று குறிப்பிடுகிறார்?

தெளிவும் அழகும் மிக்க ஈட்டை வடக்குத் திருவீதிப்பிள்ளை ஏடுபடுத்தவில்லை என்றால் நம்பிள்ளையின் சொற்களும், சொற்பொருட்களும் காற்றில் கரைந்து போயிருக்கும். அவருடைய பணியைப் பாராட்டியே அவரை "வள்ளல்" என்று சிறப்பித்திருக்கிறார் மாமுநிகள்.

இந்த வ்யாக்யாநத்திற்கு ஏன் ஈடு என்ற பெயர் வந்தது?

இதனை அடுத்த இடுகையில் பார்ப்போம்.

Dasan
Mukundhan Kidambi

No comments:

Post a Comment